ஞாயிறு, 30 ஜூன், 2013

நிறைந்து போன குப்பை தொட்டிகள் ...



எங்கிருந்து வந்தாய் ? -   நீ எங்கிருந்து வந்தாய்...?
நிலம் நீர் காற்றில் நிறைந்திருந்தாய்
நெருப்பில் ஆகாயத்தில் கலந்திருந்தாய்

ஒருங்கிணைந்து போனாய் தந்தைக்குள் சக்தியாக
தள்ளப்பட்டாய்  தாய்க்குள்  சகதியாக
கோடி உயிர்களோடு போராடி வென்றாய்
முட்டி மோதி அண்டம் துளைத்தாய்

சில நாள்  இரத்தக் கட்டியாக
சில நாள் சதைப்பிண்டமாக
உருமாறி உருமாறி உருவமடைந்தாய்

ஒருநாள்  துப்பப்பட்டாய்
ஐம்புலன்களை கொண்ட அதிசய  மிருகமாய்

 இப்போது நீ  காலியான குப்பை தொட்டி
உன்னுள் கொட்டப்பட குப்பைகள் காத்திருக்கின்றன
தவழ , நிற்க , நடக்க கற்றுக்கொள்ளும் வரை
அனுமதிக்கப்பட்டாய்  நீ நீயாக இருப்பதற்கு

தாய் மொழி கற்றாய்  அதன்மூலம் சிந்திக்க கற்றாய்

உயரமாய் ஒன்றை காட்டி மரம் என்றார்கள்
உயரமாய் இருப்பதெல்லாம் மரமா? என்றாய்
இல்லையில்லை அது மாமரம் இது தென்னை மரம்
வேறுபாடு சொல்லித்தந்தார்கள்

உருண்டையாய் ஒன்றை காட்டி பந்து என்றார்கள்
உருண்டையாய் உள்ளதெல்லாம் பந்தா? என்றாய்
இல்லையில்லை அது மஞ்சள் பந்து இது வெள்ளை பந்து
வேறுபாடு சொல்லி தந்தார்கள்

நம்பத்துவங்கினாய் - அவர்கள் சொல்வதெல்லாம்
உண்மையென உள்வாங்க துவங்கினாய்

நட்ட கல்லை சுட்டிக்காட்டி சாமி என்று சொன்னார்கள்
முட்டி போட்டு கும்பிட்டா மோட்சம் என்று சொன்னார்கள்
வேதப்பொய்கள் , புராணப் புரட்டுகள்
இதிகாச இட்டுகள் ,கலர் கலர் பொய்கள்

அப்போதே கொட்டப்பட்டது ஆன்மீக குப்பை

தந்தை அடிக்கும்போது தாய் பணியும்போது
தானாக நுழைகிறது ஆணாதிக்க குப்பை

பெண்ணை பொருள் என்று- அவள்
உடலை போகமென்று  - தினம்
பலநூறு வாய்கள் மென்று
பலவாறு பொய்கள் துப்ப
பட்டென்று கொட்டியது ஆபாசக் குப்பை

பாடப்புத்தகங்கள் ஒருபோதும் முழு உண்மை சொல்லாது
நூறாண்டுகால வாழ்வியலை , ஒரு தேசத்தின் வரலாறை
அரைப்பக்கத்தில் அடைத்து படித்துக்கொள் எனும்போது
படிப்படியாய் கொட்டியது திரிபுக் குப்பை

தேர்ச்சி பெறுவதே தேவை என்றும்
மதிப்பெண் பெறுவதே மார்க்கம் என்றும் -உன்னை
நவீன அடிமையாய் உருவாகினார்கள்

இன்றைய உலகை வெல்ல
எல்லோரையும் முந்திச்செல்ல
களவு செய்,கொலை செய், எதுவும் செய்

கொலை செய்கையில் கைகள் நடுங்கினால்
சிங்களனை பார்த்துக்கொள்
பௌத்தமும் கொலை செய்யும்  -உன்னை
சமாதானம் செய்துகொள்

சந்தைப் பொருளாதாரம் - உன்னை
சரக்காக மாற்றும்

உனக்கென தனி நியாயங்கள்
உனக்கென தனி தீர்வுகள்
ஊசி துளைக்கும் வாழைப் பழமாய்
ஊடுருவும் குப்பைகள் உனக்குள்ளே

ஆனாலும் மறக்காமல் ஐவேளை தொழுதுகொள்
மறுமையின் சுகவாழ்வை முன்பதிவு செய்துகொள்

நீயும் நானும் , நம்போல்  யாவரும்
நிறைந்துபோன குப்பை தொட்டிகளே

நிறைந்து போன குப்பைகளில்
மனிதம் தொலைந்து போகட்டும்
முடையாய் நாறும் மனதுக்குள்
மானுடம் மட்கிச் சாகட்டும்
உன்மனம் உன்னை உறுத்தலாம்
உனக்கே உன்னை வெறுக்கலாம்

ஆனாலும் பொறுத்துக்கொள்
அப்படியே சகித்துக்கொள்

பிறர் வலியை பிறர் வேதனையை
நின்று பார்ப்பது நேர விரையம்
ஓடு பணம் தேடி ஓடு
உன் வாழ்வே முடியும் வரையிலும்
பணம் தேடியே ஓடு

சலிப்படியும் போது
டாஸ்மாக் தேடு

இளைப்பாறுதல் வேண்டுமா? - தேவனின்
பரிசுத்த ஆவியை நாடு

உன் கொலை, களவு, காமமெல்லாம்
தேவனால் மன்னிக்கப்படும்
உன் பாவக்குப்பைகள் எல்லாம்
தேவனால் சுமக்கப்படும்

ஆமென்...

- தோழர் ஹீரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக