கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஜூன், 2013

காதலறியா காதலர்கள் ...



ஆகப்பெரிய முயற்சிகளின் மூலமாக
அடியோடு மறந்திடவே நினைக்கிறேன்
தோற்றுப்போன என் காதலையும்
தோற்கடித்துப் போன என் தேவதையையும்...

எப்படியெனினும் ஏதாவதொரு வகையில்
நினைவுபடுத்தியே போகிறது
வருடாவருடம் வரும் காதலர் தினங்களும்
வளையவரும் காதலறியா காதலர்களும்...

இதுபோன்ற ஒரு கருப்பு தினத்தில் தான்
இதுபோன்ற ஒரு காதலர் தினத்தில் தான் -அவள்
காரணங்கள் ஏதுமின்றி காணாமல் போயிருந்தாள்
என் உண்மை காதலை 'காணாமல்' போயிருந்தாள் ...


எப்போதும் போலவே பார்த்தாய்
எப்போதும் போலவே சிரித்தாய்
எப்போதும் போலவே தோள் சாய்ந்தாய்
அதற்கு முதல் நாள் வரையிலும் .

எப்போது நீ நடித்தாய்?
இப்போதும் புரிபடவே இல்லை ...


எப்படி உன்னால் மட்டும் ஒரே நேரத்தில்
ஒருவன் காதலை கொன்று
ஒருவன் காதலை காப்பாற்ற முடிந்தது?

காதல் தெய்வீகம்
காதல் புனிதம்
காதலே கடவுள்
காதலே வாழ்க்கை
யாருக்கு ?
தோற்றுப்போன எனக்கா?
தோற்கடித்துப் போன உனக்கா?

அந்த நாள் காலையிலும்
சலனங்கள் ஏதுமில்லாமல்
இயல்பாகவே நீ இருந்தாய்
இல்லையில்லை நடித்துக்கொண்டிருந்தாய் ...

ஐந்து மணி வாக்கில் என் அலைபேசி மணி ஒலித்தது
ஐந்தாறு வார்த்தைகளில் நீ சொன்னாய்

"நான் காதலித்தவனை கரம் பிடிக்கிறேன்
எனக்கான வாழ்க்கையினை நானே தீர்மானிக்கிறேன்
மன்னித்துவிடுங்கள் அப்பா "...

ஆகப்பெரிய முயற்சிகளின் மூலமாக
அடியோடு மறந்திடவே நினைக்கிறேன்
தோற்றுப்போன என் காதலையும்
தோற்கடித்துப் போன என் தேவதையையும்...

- தோழர் ஹீரா

நிறைந்து போன குப்பை தொட்டிகள் ...



எங்கிருந்து வந்தாய் ? -   நீ எங்கிருந்து வந்தாய்...?
நிலம் நீர் காற்றில் நிறைந்திருந்தாய்
நெருப்பில் ஆகாயத்தில் கலந்திருந்தாய்

ஒருங்கிணைந்து போனாய் தந்தைக்குள் சக்தியாக
தள்ளப்பட்டாய்  தாய்க்குள்  சகதியாக
கோடி உயிர்களோடு போராடி வென்றாய்
முட்டி மோதி அண்டம் துளைத்தாய்

சில நாள்  இரத்தக் கட்டியாக
சில நாள் சதைப்பிண்டமாக
உருமாறி உருமாறி உருவமடைந்தாய்

ஒருநாள்  துப்பப்பட்டாய்
ஐம்புலன்களை கொண்ட அதிசய  மிருகமாய்

 இப்போது நீ  காலியான குப்பை தொட்டி
உன்னுள் கொட்டப்பட குப்பைகள் காத்திருக்கின்றன
தவழ , நிற்க , நடக்க கற்றுக்கொள்ளும் வரை
அனுமதிக்கப்பட்டாய்  நீ நீயாக இருப்பதற்கு

தாய் மொழி கற்றாய்  அதன்மூலம் சிந்திக்க கற்றாய்

உயரமாய் ஒன்றை காட்டி மரம் என்றார்கள்
உயரமாய் இருப்பதெல்லாம் மரமா? என்றாய்
இல்லையில்லை அது மாமரம் இது தென்னை மரம்
வேறுபாடு சொல்லித்தந்தார்கள்

உருண்டையாய் ஒன்றை காட்டி பந்து என்றார்கள்
உருண்டையாய் உள்ளதெல்லாம் பந்தா? என்றாய்
இல்லையில்லை அது மஞ்சள் பந்து இது வெள்ளை பந்து
வேறுபாடு சொல்லி தந்தார்கள்

நம்பத்துவங்கினாய் - அவர்கள் சொல்வதெல்லாம்
உண்மையென உள்வாங்க துவங்கினாய்

நட்ட கல்லை சுட்டிக்காட்டி சாமி என்று சொன்னார்கள்
முட்டி போட்டு கும்பிட்டா மோட்சம் என்று சொன்னார்கள்
வேதப்பொய்கள் , புராணப் புரட்டுகள்
இதிகாச இட்டுகள் ,கலர் கலர் பொய்கள்

அப்போதே கொட்டப்பட்டது ஆன்மீக குப்பை

தந்தை அடிக்கும்போது தாய் பணியும்போது
தானாக நுழைகிறது ஆணாதிக்க குப்பை

பெண்ணை பொருள் என்று- அவள்
உடலை போகமென்று  - தினம்
பலநூறு வாய்கள் மென்று
பலவாறு பொய்கள் துப்ப
பட்டென்று கொட்டியது ஆபாசக் குப்பை

பாடப்புத்தகங்கள் ஒருபோதும் முழு உண்மை சொல்லாது
நூறாண்டுகால வாழ்வியலை , ஒரு தேசத்தின் வரலாறை
அரைப்பக்கத்தில் அடைத்து படித்துக்கொள் எனும்போது
படிப்படியாய் கொட்டியது திரிபுக் குப்பை

தேர்ச்சி பெறுவதே தேவை என்றும்
மதிப்பெண் பெறுவதே மார்க்கம் என்றும் -உன்னை
நவீன அடிமையாய் உருவாகினார்கள்

இன்றைய உலகை வெல்ல
எல்லோரையும் முந்திச்செல்ல
களவு செய்,கொலை செய், எதுவும் செய்

கொலை செய்கையில் கைகள் நடுங்கினால்
சிங்களனை பார்த்துக்கொள்
பௌத்தமும் கொலை செய்யும்  -உன்னை
சமாதானம் செய்துகொள்

சந்தைப் பொருளாதாரம் - உன்னை
சரக்காக மாற்றும்

உனக்கென தனி நியாயங்கள்
உனக்கென தனி தீர்வுகள்
ஊசி துளைக்கும் வாழைப் பழமாய்
ஊடுருவும் குப்பைகள் உனக்குள்ளே

ஆனாலும் மறக்காமல் ஐவேளை தொழுதுகொள்
மறுமையின் சுகவாழ்வை முன்பதிவு செய்துகொள்

நீயும் நானும் , நம்போல்  யாவரும்
நிறைந்துபோன குப்பை தொட்டிகளே

நிறைந்து போன குப்பைகளில்
மனிதம் தொலைந்து போகட்டும்
முடையாய் நாறும் மனதுக்குள்
மானுடம் மட்கிச் சாகட்டும்
உன்மனம் உன்னை உறுத்தலாம்
உனக்கே உன்னை வெறுக்கலாம்

ஆனாலும் பொறுத்துக்கொள்
அப்படியே சகித்துக்கொள்

பிறர் வலியை பிறர் வேதனையை
நின்று பார்ப்பது நேர விரையம்
ஓடு பணம் தேடி ஓடு
உன் வாழ்வே முடியும் வரையிலும்
பணம் தேடியே ஓடு

சலிப்படியும் போது
டாஸ்மாக் தேடு

இளைப்பாறுதல் வேண்டுமா? - தேவனின்
பரிசுத்த ஆவியை நாடு

உன் கொலை, களவு, காமமெல்லாம்
தேவனால் மன்னிக்கப்படும்
உன் பாவக்குப்பைகள் எல்லாம்
தேவனால் சுமக்கப்படும்

ஆமென்...

- தோழர் ஹீரா

சாதின்னா என்னங்க எசமான்....

                                                           படம்: நன்றி வினவு   



உள்ளே நுழையாதே                         
ஊழியம் செய்ய பிறந்தவனே 
உள்ளே நுழையாதே....

ஏன் எசமான் என்னை தடுக்கறீங்க ?
என்ன குற்றம் எங்கிட்ட பாத்தீங்க?

நீ வேற சாதியடா வெவரமற்றவனே,
நீ தாழ்ந்த சாதியடா தகுதியற்றவனே....

என்னைப்போலத்தான் நீங்களும் இருக்கீங்க
உங்களைப்போலத்தான் நானும் இருக்கேன்,
நம்மை வேறுபடுத்தும் சாதிஎதுவும் -என்
கண்களுக்கு காணலையே,
வெவரமா சொன்னா  வெளங்கிககுவேன்  எசமான்...

நான் திருமால் தலையில் பிறந்த
உயர்ந்த சாதியடா,-நீ
காலில் பிறந்ததனால்
தாழ்ந்த சாதியடா....
வேதப்புத்தகத்தில் உள்ளதெல்லாம்
படிக்க உனக்கு தகுதி இல்லையடா...

எம்புள்ள படிக்கிற அறிவியல் புத்தகத்தில்
மனுஷனுக்கு கருப்பை வயித்துல இருக்குதுன்னு
படம் வரஞ்சு பாகம் குறிசிருக்கே-உங்க
வேதம் சொல்றது பொய்யுங்க எசமான்-அந்த
பொய்கள படிக்க எனக்கு ஆசையில்ல எசமான்.

அப்படின்னா பொய்கள் தான் சாதியா எசமான் ?

எதிர்த்துப்பேசாதே எகத்தாளம் புடுச்சவனே,
திருப்பிபேசாதே திமிரு பிடுச்சவனே,
கூலி கொடுக்கும் பண்ணையார் நான்,
கூலிக்கு உழைக்கிற அடிமை நீ
இந்த வேறுபாடு சாமி படச்சதடா ....

நீங்க அப்படி இருக்க காரணமும் சாமியில்ல ,
நான் இப்படி இருக்க காரணமும் சாமியில்ல ,
என் உழைப்ப சுரண்டி உங்க வயிறு பெருக்குது 
உங்களுக்கு உழைச்சு உழைச்சு என் வயிறு சுருங்குது,
பொது உடைமை ஆட்சி வரப்போகுது எசமான்-அப்ப
உங்களுக்கும் எனக்கும் ஒரே பேருதான் எசமான்
உழைப்பாளி என்கிற ஒரே பேருதான் எசமான் .

அப்ப காசு பணம் தான் சாதியாஎசமான் ?

எம்பேருக்கு பின்னாலே சாதி பேரு  போட்டா
அது எனக்கு கௌரவண்டா
உஞ்சாதி பேரு சொன்னாலே கேவலண்டா...

எம்பெயர எங்கப்பா அம்மா  வச்சாங்க
உங்க பெயர உங்க அம்மா அப்பா வச்சிருப்பாங்க
செத்துப்போனா உங்களுக்கும் எனக்கும்
 ஒரே பேருதான் எசமான்
பொணம் என்கிற ஒரே பேருதான் எசமான் .

அப்படின்னா பேருதான் சாதியா எசமான் ?

உன்னைப்போல பேசுன எல்லோரும்
போன எடம் தெரியுதா?
நந்தனுக்கு ஆன கதியில்
 உனக்கு பாடம் இருக்கு புரியுதா ?
கீழ வெண்மணி வரலாறு
 சொன்ன செய்தி விளங்குதா?.....

நல்லா தெரியுது எசமான்,
விவரம் புரியுது எசமான்
ஒன்னு மட்டும் சொல்லுறேன் எசமான்
நந்தனப்போல் எரிஞ்சுபோக
இது புரானக்காலமும் இல்ல எசமான்
கீழ வெண்மணிபோல் கருகிப்போக
இது அறியாமைக் காலமும் இல்ல எசமான்...,

அப்படின்னா இந்த கொலைவெறி தான் சாதியா எசமான்?


உடம்புக்குள்ள செங்குருதி ஓடுது எசமான்
நெஞ்சுக்குள்ள செங்கொடியும்  பறக்குது எசமான்
மார்க்சியம் இப்போ புரிஞ்சுபோச்சு எசமான்
பயமெல்லாம் நெஞ்சவிட்டு  பறந்துபோச்சு எசமான் ...
 உங்கள் பகட்டும், அதிகாரமும் பறக்கப்போகுது எசமான்
இனி வரப்போவது சாதிப்போர் இல்லை எசமான்
விண்ணை முட்டும் வர்கப்போர் எசமான்

வீரஞ்செறிந்த விவசாயப்படையொன்று வருகுது எசமான்
தோள் தடித்த தொழிலாளர் படையொன்று வருகுது எசமான்
சமதர்ம உலகு படைக்க செந்தொண்டர் படையொன்று வருகுது எசமான்
பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் நிலைக்கப்போகுது எசமான்....


ஐயோ ! என்ன கொடுமை இது!
கலிகாலம் இதுதானா கடவுளே,
கூலி கேட்கும்  கூட்டமெல்லாம்    கூடிவருகுதா ?
அடங்கிப்போகும் கூட்டமெல்லாம் ஆட்சி செய்யுதா ?
  தீண்டாமை சுவர்களெல்லாம் தூளாகப்போகுதா?
ஒசந்த சாதி, தாழ்ந்த சாதி ஒன்றாகப்போகுதா  ?
பண்ணையும்,அடிமையும் ஒன்றாகப்போகுதா ?
காற்று போல நிலமும் ,வளமும்  பொதுவாகப்போகுதா?

சாதிப்பேரால் ஏமாற்றி வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறதா?


அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?

- தோழர் ஹீரா

வியாழன், 14 அக்டோபர், 2010

காஷ்மீர்

பற்றி எரிகிறது பனி மலை

எரியூகியாக எங்கள் உணர்வு

நிறைந்து வழிகிறது எங்கள் குருதி

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்

ஒரு நாள் வெந்து பொசுங்கும் உங்கள் ஏகாதிபத்திய மோகம் 

அதுவரை அஞ்சாமல் தொடர்வோம்.....................

கல்லெறிதலும் கல்லறை செல்வதும்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

முதலாளி

போபால் ஊரே படுகொலை - ஆண்டர்சன் முதலாளி
தண்ட காரண்யா மக்கள் படுகொலை - வேதாந்த முதலாளி
ஈழம் ஒரு இனமே படுகொலை - டாட்டா அம்பானி மற்றும் சில இந்திய தரகு முதலாளி
அய்யய்யோ  பயங்கரவாதி  இல்ல இல்ல முதலாளி