சனி, 22 ஜூன், 2013

ஈகோ தான் மானம் என்றால் மானம் கெட்டவர்களே கம்யூனிஸ்ட்டுகள்...

நேற்று திருப்பூருக்கு சென்றிருந்தேன் அங்கே CPM இல் இருந்து விலகிய சில நண்பர்களை சந்தித்து உரையாடிக்கொண்டு இருந்தேன். அப்போது நிறைய விசயங்களை விவாதித்து கொண்டிருந்தோம். அப்போது எதைப்பற்றியோ கேள்வி கேட்ட ஒருவரை மிக நாசுக்காக மற்றவர்கள் புறக்கணித்தனர். அவர் சென்ற பின்னர் அதைப்பற்றி கேட்ட பொழுது விடுங்க தோழர் அவன் சின்ன பையன் என்றனர். பொதுவாகவே பதில் தெரியவில்லை என்றால் இப்படிதான் 'சின்ன பையன்' என்று சொல்லி தப்பித்து கொள்வார்கள் என்று நான் கூறினேன்.(பிறகு அது ஒரு நீண்ட விவாதம் ஆனது)
இரவு வீடு திரும்பும் வழியில் இதே போன்ற ஒரு நிகழ்வு. என்னிடம் எனது தவறை (அவரை சந்திப்பதாக கூறி நேரத்துக்கு சந்திக்க முடியவில்லை) சுட்டிக்காட்டிய என்னைவிட 15 வயது குறைவான இளைஞனிடம் மன்னிப்பு கேட்டது என்னோடு வந்திருந்த என் சமவயது நண்பனுக்கு பிடிக்கவில்லை. அவன் கேட்க்கிறான். 'என்னடா சின்ன பையனுக்கேல்லாம் போயி மரியாதையா பதில் சொல்லிக்கிட்டு' நாளையும்பின்னியும் பார்த்தா மதிப்பானா? நீ கம்யுனிசம் பேசுறேன்னு இவனுக்கெல்லாம் மரியாதை கொடுத்து.......மானமே போச்சு என்றான்.
உண்மையில் மானம் என்பதன் பொருள் இதுதான் என்றால் மானம் கெட்டவர்களே கம்யூனிஸ்ட்டுகள் என்றேன். புரியாமல் குழம்பிய நண்பனுக்கு விளக்கினேன். நீ புரிந்துகொண்டிருக்கும் பொருளில் உள்ள மானம் என்ற சொல்லே நிலப்ரபுத்துவ சமூக அமைப்பின் நீட்சியே என்றேன். ஒண்ணுமே புரியவில்லை என்றான். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு உதாரணமாக ஆடுகளம் படத்தில் வருமே இறுதிக்காட்சி அதில் அந்த முதியவரிடம் தனுஷ் சொல்லுவார். நீ செய்த எல்லாமே எனக்கு தெரியும் என்று உடனே தனது கழுத்தை அறுத்துக்கொண்டு செய்துவிடுவார் அந்த முதியவர். இது அவருக்கு மானம் போய்விட்டதால் எடுத்த முடிவு. ஆனால் உண்மையில் இது எந்தவகையான மனநிலை தான் செய்த தவறை தன்னிலும் சிறுவயது உடைய ஒருவனுக்கு தெரிந்து விட்டது நான் அவனைவிட மேலானவன் எனவே இனியும் உயிரோடு இருக்ககூடாது எனும் மனநிலை தானே. மாறாக அந்த இளைஞனிடம் (தனுஷ்) தனது தவறுகளுக்கு வருந்தி சுயவிமர்சனம் செய்துகொண்டிருக்க மணம் முன் வராததன் காரணமும் இதுவே இந்த மேலானவன் எனும் ''ஈகோ'' தான் அந்த வகையில் எந்த ஒரு தவறையும் ''ஈகோ'' இல்லாமல் சுய விமர்சனம் செய்து கொள்வதிலிருந்து விலகி ''மானம்'' என கட்டமைக்கப்பட்ட ஒரு சொல்லாடலை வைத்துக்கொண்டு சாக்கு சொல்பவர்கள் அல்ல கம்யுனிஸ்ட்டுகள். ஆனால் மானம் என்பதன் சரியான பொருளில் என்றால் அதாவது சுரண்டுவதற்கு எதிராக அடிமைப்படுத்துவதற்கு எதிராக வெகுண்டேழுவதுதான் மானம் என்றால். மானத்தில் புடம் போட்ட மானஸ்த்தர்களே கம்யூனிஸ்ட்டுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக