'எங்கள் முன்னோர் சமூகம் ஏழைகளாக இருந்ததினால் நாங்கள் இன்று தாழ்த்தப் பட்டவர்களாக இருக்கிறோமா ? இல்லை தாழ்த்தப் பட்டவர்களாக நாங்கள் இருப்பதால் இன்று ஏழைகளாக இருக்கிறோமா?'
கடவுள் உலகை படைத்தார், கடவுளே சகல ஜீவராசிகளையும் படைத்தார் என்பது போல கடவுளே சாதிகளை, ஏற்றத்தாழ்வுகளை படைத்தார் என்பதும் அப்பட்டமான பொய் என்பதை கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.ஏற்கனவே இது பற்றி அறிந்த தோழர்கள் பொருத்தருள்க.அவசியம் கருதி எதையும் தவிர்க்க முடியவில்லை. மேலும் எனக்கு கள ஆய்வு செய்யும் வாய்ப்பு இல்லை .பெரும்பாலும் பிரதிகளையே என் ஆய்வுக்கு எடுத்திருக்கிறேன் . உதவிய நூல்களின் பெயர்களை இறுதியில் கொடுத்துள்ளேன். இதில் யாருக்கேனும் மறுப்பு இருந்தால் ஆதாரத்தோடு சுட்டி காட்டினால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன் .
உலகில் இந்தியா தவிர ஏறத்தாழ அணைத்து நாடுகளிலும் வர்க்கங்களாக பிளவு படுத்தபட்டுள்ள மக்கள் சமூகம் இந்தியாவில் மட்டும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத, சிக்கலான, சூழ்ச்சிகரமான சாதிய கட்டமைப்பாக பிளவு படுத்தப்பட்டுள்ளது. அதாவது எளிதாக சொன்னால் வர்க்க பிரிவினை மதச்சாயம், சாதிச்சாயம் பூசப்பட்டு வேறு வடிவில் இருக்கிறது .எல்லா நாடுகளிலும் உழைக்கும் மக்கள் தம் அவலங்களுக்கு எதிராக களம் இறங்கி போராடுகையில் இந்தியாவில் அதற்கான சுவடு கூட இல்லாமல் மக்களை மழுங்கடிக்கப்பட்ட உணர்வு நிலையிலேயே வைத்திருப்பது தான் சாதியத்தின் வெற்றி.இதன் வேர்களை சிறிது மனித குல வரலாற்று பின்னணியிலிருந்து பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஆதி சமூகத்தில் குடும்ப உறவு முறை இருக்கவில்லை .மனிதர்கள் சிறு சிறு கூட்டங்களாக அதாவது சமூக குழுக்களாக சேர்ந்து வாழ்ந்தனர் .இதில் ஆணும் பெண்ணும் சமம். ஆனாலும் வேட்டையாடுதலில் முன்னிலை வகித்தல் ,வேட்டையாடப்பட்ட உணவை தன் குழுவினருக்கு பகிர்ந்து கொடுத்தல் ,நிர்வாகம் போன்ற முக்கிய பொறுப்புகள் அனைத்தும் பெண்களிடமே இருந்தது .அதாவது குழு தலைமை பெண்கள் வசமே இருந்தது. இதை பழைய கற்கால தாய் வழி சமூகம் என தொல்லியல் துறையினர் வரையறுக்கின்றனர்.
வேறுபாடின்றி எல்லா குழுக்களும் ஆரம்பத்தில் தொடர்ந்து நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர் .நிலையாக ஒரு இடத்தில வாழாமல் தொடர்ந்து உணவு சேகரிப்புக்காக இடம் பெயர்ந்து கொண்டே இருந்தனர்.வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடி தொழில் மட்டுமே பிரதான தொழிலாக இருந்தது.இந்த கால கட்டத்தில் வேறுபாடின்றி எல்லா மனிதர்களுக்கும் இறைச்சியே பொது உணவு.(ஆனால் இன்றைய சூழலில் இறைச்சி உண்பவர்கள் கீழானவர்கள் என்றும்இறைச்சி உண்ணாதவர்கள் மேலானவர்கள் என்றும் ஒரு பொய்யான பரப்புரை நம் சமூகத்தில் இருப்பதை இதோடு பொருத்தி பார்க்க வேண்டும்.)
பிரசவ கால ஓய்வில் இருந்த பெண்கள் தாம் உண்டு வீசிய தாவர உணவின் எச்சங்களிலிருந்து அதே வகையான புதிய தாவர இனம் வளர்வதை கண்டார்கள்.விவசாயத்தின் அறிமுகம் கண்டறியப்பட்டு விட்டது.ஆக விவசாயத்தை மனித குலத்துக்கு தந்த பெருமையும் பெண்களையே சேரும்.கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் உணவுக்காக கால்நடைகள் வளர்ப்பதும் ஆரம்பமாகியது ,சிறு சிறு உழைப்புச் சாதனங்களையும் மனிதன் கண்டறிய துவங்கினான்.
உணவு சேகரிப்பு வாழ்க்கை முறையிலிருந்து உணவு தானிய உற்பத்தி முறைக்கு மனிதன் முன்னேறினான்.இந்த காலகட்டம் மனித குல வரலாற்றில் மிக முக்கிய காலகட்டமாகும். உற்பத்தியும்,கூட்டு உழைப்பும் பொருளாதார சமூக அமைப்பில் புரட்சி கரமான மாற்றத்தை கொண்டு வந்தது.இதிலிருந்து புதிய கற்கால யுகம் துவங்குகிறது.
மனிதன் விவசாயம் துவங்கி பல ஆயிரம் ஆண்டுகள் வரையிலும் கூட அது மனிதனின் பிரதான தொழில் ஆகவில்லை .வளமான பூமியும் நீரும் கிடைக்காத இடங்களில் வாழ்ந்த மனிதர்க்கு நாடோடி வாழ்க்கையே தொடர்ந்தது..ஆனால் விவசாயம் பிரதான தொழிலாக கொண்ட சமூக குழுக்கள் முதன் முதலில் மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து மேற்கு இந்தியா வரை பரவியிருந்தது .சுருக்கமாக சொல்வதானால் மனித சமூகப்பரினாமத்தில் இந்த முக்கிய நடவடிக்கை நைல் நதியிலிருந்து சிந்து நதி வரையிலான பகுதிகளிலேயே ஏற்பட்டது,இங்கிருந்துதான் வளர்சிக் கட்டத்திற்கான துவக்கம் பல பகுதிகளுக்கும் பரவியது.இது கி.மு. 3000 ஆண்டுவாக்கில் நிகழ்ந்ததாக கணக்கிடப்படுகிறது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் துவக்கத்தால் மனிதனின் உற்பத்தி சக்தி பலமடங்கு பெருகிவிட்டது.இப்போது அவன் உணவுக்காக பழங்களை,கிழங்குகளை தேடி அலைய வேண்டியதில்லை,தான் செய்யும் விவசாயம் மூலம் தன் உணவு தேவைக்கு போக கொஞ்சம் மிச்சப்படுத்தும் நிலைக்கு அவன் வந்துவிட்டான்.மாமிசத்துக்காக நாள் முழுதும் கஷ்டப்பட்டு வேட்டையாட வேண்டியதில்லை ,தான் வளர்க்கும் வளர்ப்பு கால்நடைகளிலிருந்து தனக்கு தேவையான மாமிசம், பால், தோல் முதலியவை பல ஆண்டுகளுக்கு போதுமான அளவு கிடைக்கும். ஆரம்ப காலத்திலிருந்தே ஆண்கள் கால்நடைகளை பராமரித்து வந்ததால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழிலில் ஆண்களின் ஆதிக்கம் நிலை கொள்ள ஆரம்பித்தது,கொஞ்சம் கொஞ்சமாக தாய் வழி சமூக அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்தது .
கால்நடைகள் உணவுக்காக மட்டுமின்றி பொதி சுமக்கவும்,பொருள்களை ஓரிடத்திலிருந்து வேறிடம் மாற்றவும் பயன்படுத்த துவங்கிய பின்பு குழுவில் உள்ள அனைவரும் உணவு உற்பத்தியில் ஈடுபட தேவை அற்றதாகிப்போனது எனவே சமூகத்தில் உள்ள சில பேரை உணவு உற்பத்தியில் (விவசாயத்திலிருந்து )இருந்து விலக்கு அளித்து (வியாபாரம் போன்ற) வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்( அதாவது உபரியான தானியங்களை விற்று வேறு பகுதிகளில் விளையும் தானியங்களை வாங்கும் பண்டமாற்று முறை)
இங்கு தான் உழைப்புப் பிரிவினை ஆரம்பமாகிறது.
வியாபாரம் மூலமும், கூட்டு உழைப்பின் மூலமும் அருகருகில் இருந்த சமூக குழுக்களுக்குள் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு ஒரு கலப்பு சமூகமாக மாற்றமடைந்தன.மனித உழைப்பு சக்தி பெருக பெருக மிகை உற்பத்தியான தானியங்களும் செல்வங்களும் பெருக ஆரபித்தன.இந்த சூழ்நிலையில் விவசாயம் பிரதான தொழிலாக அமையாத நாடோடி குழுக்களுக்கு விவசாய குழுக்களின் செல்வத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு படையெடுப்பு, கொள்ளை போன்றவை அரங்கேற துவங்கின.இந்த சூழ் நிலையில் ஈட்டிய செல்வதை பாதுகாத்துக் கொள்ளவும், தன் குழுவுக்குள், ஒழுக்கம் கட்டுப்பாடு போன்றவற்றை ஏற்படுத்தவும் ஒரு அமைப்பு ரீதியான தலைமையின் அவசியத்தை உணர்ந்தார்கள்.எனவே ஒவ்வொரு சமூக குழுவிலும் தலைவர்கள் தோன்ற ஆரம்பித்தனர்.
சமூக குழுத்தலைவரை அவரது குணங்களை கொண்டே முதலில் தேர்ந்தெடுத்தனர்,சமூக ஆச்சாரமான சடங்குகள் மந்திர வித்தைகள் ,ஆயுத பிரவேகம்,வேட்டை போன்ற விசயங்களுக்கே முக்கியத்துவம் இருந்தது.அந்த தலைவருக்கு மக்கள் தாம் வேட்டையாடிய பொருள்களிலிருந்தும் சமூக செல்வத்திலிருந்தும் முதல் பங்கை கொடுக்க ஆரம்பித்தனர்.மேலும் சமூகத்தில் அவரை உயர்வாக மதித்து வந்தனர்.இவ்வாறு வெவ்வேறு பகுதிகளில் உள்ள குழுக்களில் உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழும் முக்கியஸ்தர் வர்க்கம் தோன்ற ஆரம்பித்தது.
அதுவரை பூமி, கால்நடைகள் மற்றும் சமூக செல்வங்கள் அனைத்தும் பொதுவுடைமையாக இருந்தது. அதன் பின் அதன் மீதான தலைவரின் கட்டுப்பாடு அதிகமானது,அதாவது சமூக சொத்துக்களை பங்கிடும் உரிமை தலைவருக்கே இருந்தது .நல்ல வளமான நிலங்கள், கனிமங்கள் கிடைக்கும் சுரங்கங்கள் அனைத்தின் மீதும் தலைவர்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர்.அப்போது மந்திர வித்தைக்கு முக்கியத்துவம் இருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, பஞ்சம் போன்ற இயற்கை அழிவுகளுக்கு காரணம் யாருக்கும் தெரியாததை பயன்படுத்திக்கொண்டு மந்திர தந்திரம்,பிரார்த்தனை,பலிகள் ,சடங்குகள் மூலம் கடவுளின்(!?) ஆசியை பெற்றுத்தரும் பூசாரி வர்க்கம் உருவாக ஆரம்பித்தது. இவர்களும் சமூகத்தில் உழைப்பிலிருந்து விலக்கு பெற்றவர்களாக ,முக்கியஸ்தர்களாகவே நிலை பெற்றனர்.
சமூக குழு தலைவர்களும் மத குருக்களும் தங்களை கடவுளாகவோ கடவுளின் பிரதிநிதிகளாகவோ காட்டிக்கொண்டனர்.சமூக உபரி செல்வம்,இயற்கை அழிவிலிருந்து மக்களை காக்கும் (!?) பொறுப்பு ,அதற்கான 'தகுதி' ,போன்றவை தமக்கே உரியதென காட்டிக்கொண்டனர்.எனவே அந்த வர்க்கம் அதிகாரத்துக்கு வந்தனர்.சமூகத்தின் மீது அதன் பிடி கெட்டியாக இறுகியது.
புதிதாக உருவான உயர் வர்க்கம், உழைக்காமல் சமூக உபரி செல்வத்தில் தனது பங்கை(!?) எடுத்துக்கொண்டதோடு நில்லாமல் புதிய உற்பத்தி முறையில் பிறர் உழைப்பை நிர்ப்பந்தித்து சுரண்டும் உரிமையை நிறுவி செல்வம் சேர்க்க ஆரம்பித்தனர்.வெளி சமூகத்திலுள்ள நபர்களை மட்டும் அடிமைகளாக்கி சுரண்டுவது தமது பேராசைக்கு போதாமல் போகவே தமது சொந்த குழுவிலுள்ள சுதந்திர மக்களையும் அடிமைகளாக்கி சுரண்ட ஆரம்பித்தனர்.இவ்வாறு ஆண்டான் அடிமை சமூகம் ஏற்பட்டது. இந்த காலத்திலேயே சாதிகளின் எளிமையான தோற்றம் ஆரம்பித்து விட்டன ,அதாவது உடல் உழைப்பில் ஈடுபடும் மக்களை கீழானவர்கள் என்று புதிதாக உருவான ஆதிக்க வர்க்கம் திட்டமிட்டு மோசடியான ஒரு கருத்தியலை விதைத்தது .பொருளாதாரத்தில் பின் தங்கிய ,விழிப்புணர்வற்ற உழைக்கும் வர்க்கம் அதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் அடங்கிப்போகுமாறு சமூக தலைமையாலும் பூசாரிகளாலும் நிர்பந்திக்கப்பட்டனர்.இன்னும் எளிமையாக சொன்னால் கடவுளர் தத்துவங்களால் அடிமையாக்கப்பட்டனர்.
இந்தியாவில் கி.மு.2500 -1500 ஆண்டுகளில் சிந்து மற்றும் இதர நாகரிக பகுதிகளில் நகர வாழ்க்கை நன்கு வளர்ச்சியடைந்து இருந்தது இதற்க்கு காரணம் ஆண்டான் அடிமை சமூகத்தின் சமூக பொருளாதார புரட்சிகர மாற்றங்களே ஆகும்.கி.மு.1800 ஆண்டு வரை இந்த நாகரிகம் செழிப்பாக இருந்தது எகிப்து,சுமேரிய,அசீரியா,கிரீஸ்,துருக்கி,ஈரான் போன்ற பிரதேசங்கள் வரை பரவி அதன் விளைவாக புதிய புதிய ராஜ்யங்கள் தோன்ற ஆரம்பித்தன.இந்தியாவிலும் தெற்கே நர்மதை வரையிலும் கிழக்கில் யமுனை வரையிலும் பரவி இருந்தது.
இந்த காலகட்டத்தில் தான் மனித குல வரலாற்றில்மிக முக்கிய திருப்பம்ஏற்படுகிறது. அதாவது விவசாயத்தை பிரதான தொழிலாக கொள்ளாத பல குழுக்கள் இந்த சமஸ்தானங்கள் மீது படையெடுத்து வென்றன.அதில் ஒரு பிரிவு ஈரான் மீது படையெடுத்து பலுசிஸ்தான் அப்கானிஸ்தான் மலைகளை கடந்து இந்தியாவில் நுழைந்தது. .தொடர்ந்து போர்களின் மூலம் நல்ல பயிற்சி பெற்றிருந்த அவர்கள் இந்த சமஸ்தானங்களை எளிதில் வென்றனர். ,சிந்து ஹரப்பா,மொஹஞ்சதாரோ நாகரிகங்கள் நிர்மூலமாக்கப்படன.இதையே நாம் ஆரியர் படையெடுப்பு என்று படிக்கிறோம்.
இங்கு ஏற்கனவே முளை விட்டிருந்த சாதியமும் ஆரியர்கள் கொண்டு வந்த வர்ண வேறுபாடும் கலந்து புதிய சாதிகள் உருவாகின.
தோழர் சு.போ.அகத்திய லிங்கம் வார்த்தைகளில் சொன்னால்..
"..இவ்வாறு கங்கை யமுனை இடைப்பகுதியில் ஆரியம் பரவியபோது அவர்கள் கருப்பையில் சாதியமைப்பு தோன்றியது,அதாவது இங்கே திராவிட மற்றும் பழங்குடியினரிடையே இருந்த குறைந்தபட்ச செயல் வடிவமான சாதியும் ஆரியர்களின் வர்ணமும் கலந்தது.இங்கு நிகழ்ந்த கோத்திர கலப்பு, தொழில் பிரிவினை,அகமன முறை எல்லாம் சேர்ந்து நூற்றுக்கணக்கான சாதிகளும் உப சாதிகளும் உருவாகின...."
"கி.மு.1000 -800 வாக்கில் ரிக் வேதத்தின் 10 ஆம் ஷுக்சம் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது,இதையடுத்து வேத விளக்கங்கள் எழுந்தன....இதில் ஐதேரிய பிராமணமும் ஷதயத் பிராமணமும் வர்ண வேற்றுமையை தவிர்க்க முடியாததாகவும் இயல்பானதாகவும் சித்தரித்தன ,சூத்திரர்களை இழிந்தவர்களாக சித்தரிக்கும் இப்பகுதி புருஷ சூக்தம் எனப்படுகிறது.வர்ண பிரிவினைக்கு ஒரு தெய்வீக தத்துவ பாதையை அளிக்கிறது .இந்த கருத்துதான் சாதிய அமைப்பின் முதுகெலும்பாய் திகழ்கிறது,சாதியம் எனும் கொடிய நெஞ்சின் ஊற்று இதுதான்..."
கி.பி மூன்றாம் நூற்றாண்டில் அசோகப்பேரரசு புத்தமதத்தை அரச மதமாக அறிவித்ததை தொடர்ந்து மௌரியபெரரசின் 140 ஆண்டுகாலம் பிராமணர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பாகவே இருந்தனர். மீண்டும் பிராமினிய ஆதிக்கத்தை நிலைநாட்ட புஷ்யமித்திரன் ஆட்சியை பிடிக்கிறான்.
"வெறும் அடக்கு முறையின் மூலம் மட்டுமல்லாமல் அதற்க்கு ஒரு கருத்தியல் வடிவம் கொடுத்தால் மட்டுமே அடக்குமுறை எளிதாகும் ,நீடித்து பயன்தரும் என்று உணர்ந்ததால் கி.மு 170 -150 ஆண்டுகளில் மனுதர்மம் புனையப்பட்டதாக கருதப்படுகிறது"(சு.போ.அ).
ஆண்டான் அடிமை சமூகத்தில் அடிமைகள் (தொழிலாளர்கள்) தங்கள் உடல்,உழைப்பு,உடமை,உற்பத்தி என்று எதன் மீதும் உரிமையற்றவர்களாக இருந்தனர்.காலப்போக்கில் இந்த சமூக அமைப்பு முடிவுற்று நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவானது.இதில் தொழிலாளர்களின் உடல் மீதும் உற்பத்தி மீதும் நில பிரபுக்களுக்கு அதிகாரம் இல்லை என்றாலும் உழைப்பின் மீது முழு அதிகாரம் இருந்தது, அதாவது தொழிலாளர்கள் கட்டாயம் கூலியின்றி நில பிரபுவின் நிலத்தில் வேலை செய்தாக வேண்டும்.
இந்த நிலப்பிரபுக்கள் அரசு அதிகாரத்தில் வசூல் பிரதிநிதியாக இருந்தனர். அவனிடம் சிறு படையும் இருந்தது. யுத்த சமயத்தில் அரசனிடமிருந்து அழைப்பு வரும் போது அந்த படையை அனுப்புவதும் மற்ற சமயங்களில் அந்த படையை கொண்டு தமது அதிகாரத்திற்கு உட்டபட்ட பகுதியில் தனது தன் மேலாண்மையை நிரூபிக்கவும் பயன்படுத்திக் கொண்டான்.ஒவ்வொரு பகுதியிலும் நிலப்பிரபுக்கள் அந்தந்த பிரதேசத்தின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.மத்திய ஆட்சியில் பலவீனம் ஏற்படும் போது இவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சுதந்திர ராஜ்யங்களை உருவாக்கினர்.
இதன் பிறகு இந்தியா, அமெரிக்காவின் கடல் பாதை கண்டறியப்பட்ட பின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் துவங்கின .ஐரோப்பிய வியாபாரத்துக்கும் பொருள் உற்பத்திக்கும் ஏற்ற சரியான சூழல் இந்த பகுதிகளில் நிலவவே ஐரோப்பிய முதலாளித்துவ உற்பத்தி முறை ஆரம்பமானது.
நிலபிரபுத்துவ சமூகத்தில் தொழிலாளர்கள் தத்தமது பகுதிகளுக்கு தேவையான உற்பத்தியே செய்து வந்தனர்.அதையும் தத்தமது சுதேசி உற்பத்திக்கருவிகள் கொண்டே செய்து வந்தனர். ஆனால் ஐரோப்பிய முதலாளிகளின் வரவுக்கு பின் இந்த தொழிளார்களுக்கு பட்டறைகள் அறிமுகமாயின ,அங்கு உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களே முதலாளிகள்.அவர்கள் வேலைப்பிரிவினை, கூட்டுறவு சித்தாந்தம் மூலம் உற்பத்தியை பலமடங்கு உயர்த்தினர்.மலிவான விலையில் பொருள்கள் உற்பத்தி ஆயின .கைகளால் செய்யும் வேலையை இன்னும் வேகமாகக இயந்திரங்களும் அந்த இயந்திரங்களை இயக்க நீராவி இயந்திரமும் கண்டறியப்பட்டன இவ்வாறு உலகம் முதலாளித்துவ திசையில் வேகமாக ஓட ஆரம்பித்தது.
மேலும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க இப்போது நிலவி வரும் நில பிரபுத்துவ கட்டமைப்பை உடைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த கட்டமைப்பில் ஒவ்வொரு தொழிலாளியும் தன் எஜமானனுக்கு (நிலப்பிரபுவுக்கு)கட்டுப்பட்டவனாகவே இருக்கிறான். எனவே இந்த கட்டமைப்பை உடைக்காமல் தொழிலார்களின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது என்று உணர்ந்த முதலாளிகள் பிரபுக்களுக்கு எதிராக மோதலை துவங்கினர்.
1789 இல் பிரெஞ்சு முதலாளிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்கி சுதந்திர கோஷத்துடன் மாபெரும் புரட்சியை செய்தனர் .இதுவே வரலாற்றில் பிரெஞ்சு புரட்சி எனும் பெயர் பெற்றதை நாம் அறிவோம்.இவ்வாறாக இறுதியாக நிலப்பிரபு முறை ஒழிக்கப்பட்டு முதலாளித்துவ முறை வெற்றி பெற்றது.இன்று ஒட்டு மொத்த உலகையும் மொத்தமாக உறிஞ்சிக்குடிக்கும் தணியாத தாகத்துடன் உலகம் முழுதும் உலகமய தாராள மய சூழ்ச்சி வலையை விரித்து வைத்து காத்திருக்கிறது.
இப்போது நமது முக்கிய பணி எது?
சாதிய முரணை எதிர்த்து பயனிப்பதா ?வர்க்க முரணை எதிர்த்து பயனிப்பதா ?
உண்மையில் ஆழமாக புரிந்து கொண்டால் இரண்டும் வேறு வேறு அல்ல,
மனிதனை சுரண்டும் அப்பட்டமான சுயநல அமைப்புதான் இரண்டும்.
பெரியாரையோ,அம்பேத்கரையோ தவிர்த்து மார்க்சிய வழியிலோ அல்லது
மார்க்சியம் தவிர்த்து பெரியார்,அம்பேத்கர் வழியிலோ சென்று
இந்த சமூக நோயை நாம் நிச்சயம் வென்றிட முடியாது .
பெரியார், அம்பேத்கர் முன்னெடுத்த இயக்கங்களை
மார்க்சிய வழியில் தொடர்ந்து கொண்டு செல்வதே
நம் முன் இருக்கும் தவிர்க்க முடியாத முக்கிய கடமை...
உதவிய நூல்கள் ...
1 .மனிதக்கதை-பிரபாகர் சான்ஸ்க்ரி (தமிழில் க.மாதவ்)
2 .குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் -பி.எங்கல்ஸ்.
3 .இ.எம் .எஸ் .நூற்றாண்டு மலர் -கே .வரதராசன் கட்டுரை.
4 .சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் - சு. போ. அகத்திய லிங்கம்.
5 .வால்காவிலிருந்து கங்கை வரை -ராகுல் சாங்கிருத்தியான்
- தோழர் ஹீரா