செவ்வாய், 3 ஏப்ரல், 2012

காந்தி தேசமாம்..... காமடி பண்றாங்கப்பா....


கடந்த சில தினங்களுக்கு முன்பு நைஜீரியா நாட்டு மாணவர்கள் கோவை நகர காவல்துறை ஆணையாளரை சந்தித்து கண்ணீர் கடிதத்தை தந்தனர். இச்செய்தி அனைத்து செய்திதாள்களிலும் வெளியாகி இருந்தது.
அக்கடிதத்தில் கீழ்க்கண்ட செய்திகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தாங்கள் நைஜீரிய நாட்டு அரசின் உதவியுடன் தமிழகத்தில் தங்கி மேற்கல்வி கற்க வந்திருப்பதாகவும். வேறு வெளிநாடுகளை மேற்க்கல்விக்காக தேர்ந்தெடுக்காத காரணம் அங்கெல்லாம் கருப்பு-வெள்ளை இனவெறி நிலவுவதால் படிக்க இயலவில்லை எனவும், ஆனால் காந்தி பிறந்த இத்தேசத்தில் இனவெறி இருக்காதெனவும் நினைத்து இங்கே மேற்கல்வி படிக்க தேர்ந்தெடுத்தோம்.
நாங்கள் இங்கு படிக்கத்தொடங்கிய சிறிது காலத்திற்குள் வாடகைக்கு குடியிருந்த அறையின் சொந்தக்காரரும் அண்டைவீட்டு குடியிருப்பு வாசிகளும் எங்களை இனவெறி காரணமாக அறையை காலி செய்து வெளியேறுமாறு கூறுகின்றனர். எனவே நாங்கள் இன்னும் கல்வி பயின்று முடிக்க சில காலம் தேவை படுவதால் எங்களை வெளியேற்ற கூடாதெனவும் மேற்ப்படி கல்வி பயில உதவி புரியுமாறும் நைஜீரியா நாட்டு மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நைஜீரிய நாட்டு மாணவர்களின் கண்ணீருக்கு காரணம் என்ன?

இந்தியா பற்றிய தோற்றம் வெளிநாடுகளில் இப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதே நைஜீரிய நாட்டு மாணவர்களின் கண்ணீருக்கு காரணம்.
இது மகான்கள் வாழ்ந்த தேசம் என்றும் கோயில்களின் நாடு என்றும் பார்ப்பனிய நூல்களாலும், எழுத்துக்களாலும் பல நூற்றாண்டுகளாக நம்பவைக்கப்பட்டுள்ளது.
மேலும் காந்தியை பற்றிய ஒரு பக்க பார்வை மட்டுமே உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா பார்ப்பனிய தேசமாகும். காந்தி இந்த பார்ப்பனிய தேசத்தை சிறிதும் சீர்குலைந்து விடாமல் கட்டிகாப்பாற்ற கர்ம சிரத்தையுடன் போராடிய மனுதர்மவாதி. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் சாதி என்னும் அரக்கனால் சித்திரவதைக்குள்ளாகி மடிந்து கொண்டிருப்பதற்கு காரணமான பார்ப்பனிய மனுதர்மத்தை தன் வாழ்நாள் முழுவதும் போற்றி புகழ்ந்த, கடைபிடித்த சாதி வெறியாளர் தான் திரு.காந்தி.
புரச்சியாளர் அம்பேத்க்கரும், தந்தை பெரியாரும் தங்களது எழுத்துக்களால் பல்வேறு நூல்களில் இதை நிரூபித்துள்ளனர். தாழ்த்தப்பட்டோரின் நலனுக்கான இரட்டை வாக்குரிமை (பூனே ஒப்பந்தம்) தர கூடாது என சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராடிய தேசத்தந்தான் காந்தி.
பிச்சை கேட்டு பெறுவது சுதந்திரம் அல்ல. தாய்நாட்டை காக்க இதோ எங்கள் உயிர் என ஆங்கில ஆட்சிக்கு எதிராக போர் முழக்கமிட்டு தூக்கு தண்டனை பெற்ற இந்த நாட்டின் தவப்புதல்வர்கள் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ்,ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்காமல் தான் நடத்த போகும் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு எந்தவித இடையூறும் வராமல் இருக்க வேண்டி மாநாட்டுக்கு முன்பே அவர்களை தூக்கில் போடுங்கள் என ஆங்கில (இர்வின் பிரபு!?) அரசுக்கு கோரிக்கை வைத்தவர்தான். அனைத்து உயிர்களையும் நேசிக்க வலியுறுத்திய நம் ''அஹிம்சா மூர்த்தி'' காந்தி. இந்திய வரலாற்றில் காந்திக்கு முதன் முதலாக கருப்பு கொடி காட்டப்பட்டதும் இச்சம்பவத்திர்காகத்தான்.
காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தவரை சாதி ஒழிப்பிற்காக ஒரு துரும்பையும் செய்யவிடாமல் தடுத்தவர்தான்.
பஞ்சாலை தொழிலாளர்களும்,உழைக்கும் மக்களும் முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்து நின்ற பொழுது முதலாளித்துவத்திற்கு நண்பனாக நின்றவர்தான். இந்த டாட்டா,பிர்லா அவர்களின் தேசத்தந்தை காந்தி.
இப்படி பல குறிப்புகளை கூறிக்கொண்டே போகலாம் இந்த திரு.காந்தியையும், அவரின் மனுதர்ம தேசத்தையும் புரிந்துகொள்ள.
இறுதியாக நைஜீரியாவில் மட்டுமல்ல உலகின் பிற நாடுகளிலும் இந்தியா பற்றி இப்படி ஒரு பிரமை ஏன் ஏற்ப்பட்டது அது நீடிக்கின்றது எனபதை அம்பேத்க்கரின் மொழியிலிருந்தே நாம் புரிந்துகொள்ளமுடியும்.
''கறுப்பின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சற்றும் குறைவில்லாததுதான். இந்தியாவில் தலித்துக்கள் மீது நடைபெறும் வன்முறையும். ஆனால் அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்கிறது பார்ப்பனியம்'' - அம்பேத்க்கார்.
பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துவோம்.உண்மையான நிலையை உலகுக்கு சொல்லுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக