பெண்புத்தி பின்புத்தி, ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை போன்ற ஆணாதிக்க பழமொழிகளுக்கெல்லாம் நம் சம காலத்தில் சாவுமணியடித்த அஸ்மா மக்பூசுக்கு முதலாவதாக வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம்.
மார்ச் 8 மகளிர்தினம் கொண்டாட தயாரகிக்கொண்டிருக்கின்றன பெரும் வர்த்தக நிறுவங்கள். மேட்டுக்குடி மகளிருக்கான விளையாட்டு நிகழ்சிகளை போட்டிபோட்டு அறிவித்து FLEX வைத்துள்ளனர் சில பெரும் ஜவுளி வர்த்தக நிறுவங்கள். அதிலொரு விளையாட்டு புதையலை தேடி (அதாவது காரில் சென்று தேடவேண்டும் சொந்தமாக கார் வைத்திருக்கும் பெண்கள்). மகளிர் தினத்தின் உண்மையான வரலாறே உண்மையில் நாம் தேடவேண்டிய புதையல. இன்று இவர்கள் கொண்டாடுவது போன்று ஓய்வு நேரத்தை போக்கிக்கொள்ள உருவானதல்ல மகளிர் தினம். ஓய்வின்றி உழைத்த மகளிர் தங்கள் களைப்பை போக்க ஓய்வு வேண்டி போராடி பெற்ற வெற்றியின் அடையாளமாக உருவாக்கப்பட்டதே மகளிர் தினம். மே 1 எப்படி உழைப்பாளர்கள் தினமோ அப்படிதான் மார்ச் 8 உழைக்கும் மகளிருக்கான தினம். 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பெண்கள் தங்கள் வீடுகளில் பஞ்சிலிருந்து நூலை திரித்துக்கொடுக்கும் வேலையே செய்துவந்தனர். அந்த நூலிலிருந்து துணி உற்பத்தி செய்வார்கள். இந்த துணி உற்பத்தி செய்யும் முறையில் பின்னர் இயந்திரம் புகுத்தப்படுகிறது. இயந்திரத்தின் உற்பத்தி வேகத்திற்கு ஈடுகொடுத்து நூல் உற்பத்தியை செய்ய முடியவில்லை பெண்களால். எனவே அவர்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைக்க வேண்டிய நிர்பந்தம் வருகிறது. அதன் பொருட்டு பல பெண்களுக்கு திருமணம் கூட தடைபெறுகிறது அதிலிருந்துதான் (SPINSTERS ) ஸ்பின்ஸ்டர்ஸ் (bachelor என்பதன் female version ) எனும் வார்த்தை பிறந்தது. அப்படி உற்பத்தியில் ஈடுபட்ட மகளிர். 10 மணிநேர வேலையும், சம உரிமையும் வேண்டி நியுயார்க் நகரத்தில் 1857 மார்ச் 8ல் அணிவகுப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் அவர்களை விரட்டி சிதறடித்தது. இரண்டு வருடத்திற்கு பிறகு இந்த பெண்கள் அதே மாதத்தில் முதல் தொழிற்சங்கத்தை துவங்கினர். 51 ஆண்டுகளுக்கு பிறகு 1908 அன்று நியுயார்க்கிலுள்ள தையல்துறையை சேர்ந்த "வாரி" சகோதரிகள் 1857 ல் நடந்த அணிவகுப்பை கவுரவுத்தும், வாக்குரிமை கோரிக்கையை முன்வைத்தும், குழந்தைகள் உழைப்பை சுரண்டுவது ஒழியவேண்டும் என வலியுறுத்தியும், பேரணி நடத்தினர். இதேபோல் "ட்ராயாங்கில் தொழிற்சாலை" நியுயார்க்கில் 1911 இல் 146 பெண்கள் தங்களையே தியாகமாக தந்த போராட்டம் . இவ்வாறு பல்வேறு அடக்குமுறைகளையும் தாண்டி பல்வேறு காலகட்டங்களில் பெண்களின் போராட்டம் தொடருந்துகொண்டேயிருந்தது.
"பெண்களின் இடம்" எனும் அற்ப சித்தாந்தங்கலையே வெட்க்கப்படவைத்த பெண்கள் அவர்கள்.
புகழ்பெற்ற லாரன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எங்களுக்கு "ரொட்டியுடன் ரோஜாவும் வேண்டும்'' என்ற பிரச்சார முழக்கத்துடன் பெண்கள் அணிவகுப்பு நடத்தினர்.
''அழகான நாளன்று நாங்கள் அணிவகுக்கும்போது
ஆயிரக்கணக்கான இருட்டு சமையலறைகளும்,
சாம்பல் நிறத்தில் ஓங்கி நின்ற இயந்திரங்களும்
ஒரு திடீர் சூரியனின் பிரகாசத்தால்
உணர்வுகள் பெருக்கெடுத்துப் பாடுகின்ற
எங்களை கேட்கின்ற மக்களுக்காக
பிரெட் அண்ட் ரோசஸ், பிரெட் அண்ட் ரோசஸ் !
நாங்கள் அணிவகுத்துக்கொண்டே
நல்ல நாட்களை கொண்டுவருவோம்
பெண்கள் எழுவதென்றால் இனமே எழுந்ததாக பொருள்
இனி அடிமைதனமும் இல்லை.
சோம்பேறிகளும் இல்லை.
ஒருவன் அமைதியாக இருக்குமிடத்தில்
பத்துபேர் மட்டுமே உழைப்பதுமில்லை.
இனி வாழ்வின் மகிழ்ச்சியை
பங்கிட்டுக்கொள்வதே இருக்கும் .
பிரெட் அண்ட் ரோசஸ், பிரெட் அண்ட் ரோசஸ் !
சர்வதேச பெண்கள் தின அணிவகுப்பை நடத்துபவர்கள் வேலைநிறுத்தக்காரர்களின் கீதமான "பிரெட் அண்ட் ரோசஸ்" என்ற பாடலை விரும்பிப்பாடுவார்கள்.
சர்வதேச மகளிர் தினம் அதிகார பூர்வ அரசு விடுமுறை தினமாக 1908 ல் அறிவிக்கப்பட்டது. அந்த வருடம் அமெரிக்காவில் வாக்குரிமை பிரச்சாரத்திற்க்காக சோசலிஸ்ட் கட்சி ஒரு தேசிய பெண்கள் குழுவை நியமித்தது. கூட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு வருடத்திலும் ஒரு நாளை சோசலிஸ்ட் கட்சி பெண்களின் வாக்குரிமைக்கான பிரச்சாரத்திற்க்காக ஒதுக்கவேண்டுமென்று குழு பரிந்துரைத்தது. வாக்குரிமையை வேலை செய்யும் பெண்கள் வரவேற்றனர்.
1910 ல் சோசலிஸ்டுகளும்,பெண்ணியவாதிகளும் அமெரிக்க முழுதும் பெண்கள் தினத்தை கடைபிடித்தனர்.1910 மே மாதத்தில் நடந்த சோசலிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸ்சில் பிப்பிரவரி இறுதி ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச பெண்கள் தினமாக அறிவிக்க வேண்டுமென்று பெண்கள் தேசிய குழு பரிந்துரைத்தது. அதற்குப்பிறகு பெண்கள் தினத்தை சர்வதேச நிகழ்ச்சியாக அடையாளப்படுத்த வேண்டுமென்ற கருத்துடன் அதே வருடம் கொபன்ஹெகனில் நடந்த 2 வது சர்வதேச சோஷலிச பெண்கள் மாநாட்டில் பிரதிநிதிகளாக அவர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் ''கிளாரா ஜெட்கின்'' என்ற புகழ்பெற்ற கம்யுனிஸ்ட் தலைவி சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில்பெண்களுக்கு உலகம் முழுதும் வாக்குரிமையை பெற உதவுவதற்கு ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அது மார்ச் 19 ஐ மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது. பின்னர் சில சதிகார அரசுகளின் திட்டப்படி மகளிர்தின எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டது.
இவ்வாறு மிக நீண்ட போராட்டம் மற்றும் பெண்களை திரட்டி பெண்களுக்கு எதிராகவே துரோகம் இளைத்தல் போன்ற அரசின் சதிச்செயல் ஆகிய எண்ணற்ற இன்னல்களையும் தாண்டிதான் இறுதியாக இன்றைய சர்வதேசிய மகளிர் தினம் மார்ச் 8 ல் உலகும் முழுவதும் கொண்டாடப்படுகிறது.மார்ச் 8 இதுவெறும் வார்த்தையல்ல பெண்கள் போராடிப்பெற்ற வெகுமதி. இந்த வரலாற்று உண்மையை பேர் அண்ட் லவ்லியும் இன்ன பிற முகப்பூச்சு அமிலங்களும் நம்மிடமிருந்து திருடிச்செல்ல அனுமதிக்காமல் கொண்டாடுவோம் ஒரு உண்மையான "உழைக்கும் மகளிர் தினமாக".