திங்கள், 12 மார்ச், 2012
சட்டக்கல்லூரியில் மகளிர் தின விழா
அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தின் எந்த ஒரு பகுதியில் அடக்குமுறை அரங்கேறினாலும். மனித உரிமைகள் மீறப்படும்போதும். அதை எதிர்த்து முதலில் பதியப்படும் எதிர்ப்பு குரல் உங்கள் குரல். கோவை சட்டக்கலூரி மாணவர்களின் குரல். எனவே நீங்கள் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் நானும் உங்களோடு கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இதற்க்கான வாய்ப்பை எனக்கு நல்கிய கல்லூரியின் முதல்வர், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
இங்கே உள்ளே வந்ததும் மனதுக்கு நிறைவான இன்னொன்றையும் கண்ணுற்றேன். எப்போதுமே பெண்கள் விடுதலை, சுதந்திரம் பற்றியெல்லாம் யாரு அதிகமாக பேசிக்கிட்டு இருப்போம்னா? ஆண்கள்தான் அதை பற்றி பேசிகிட்டு இருப்போம். நேற்றுகூட இன்றைய மகளிர்தின தின நிகழ்ச்சிக்காக என்னை மாணவர்கள் அழைக்க வந்தபொழுது அனைவரும் ஆண்களாகத்தான் இருந்தனர். ஒரு அரைமணிநேரம் கழித்து ஒரே ஒரு பெண் வந்தார். நதியா.
பொதுவாகவே விடுதலை, சுதந்திரம் என்பதன் பொருள். நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புவது அல்ல. நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவது ஆகும்.
அந்தவகையில் இங்கே ஆணுக்கு பெண் சரிநிகர் சமானமாக அமர்ந்திருப்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
மகளிர் தினவிழா என்பது இன்றைக்கு முதலாளித்துவம் தனதாக்கி கொண்டது. முதலாளித்துவ சமூகத்தின் பெரு நிறுவனகள் இந்தநாளையும் தனது இலாப நோக்கிற்கு பயன்படுத்திக்கொண்டுள்ளன. அதற்க்கு தனது ஊடக பலத்தையும் பயன்படுத்தி முன்னேறுகிறது.
உழைக்கும் பெண்கள் சரியான நேர உழைப்பு, சரியான ஓய்வு வேண்டி முதலாளித்துவ இலாபவெறிக்கு எதிராக போராடிய நாளையே இன்று இலாப நோக்கிற்கு பயன்படுத்துகின்றது. இந்த முதலாளித்துவம். அதனால்தான் மார்க்ஸ் சொன்னார் ''இலாபம் கிடைக்கும் என்றால் தனக்கான சவப்பெட்டியை கூட தானே செய்துகொள்ளும் முதலாளித்துவம்'' என்று. fair & lovely யும் இன்ன பிற முகபூச்சு நிறுவனங்களும் தொலைக்காட்சியில் மகளிர்தின வாழ்த்துக்கள் சொல்கின்றன. பெண்ணையே விற்பனை பண்டமாக மாற்றி. ஒரு ஜவுளி நிறுவனம் பெண்கள் தின சிறப்பு போட்டிகள் என்ற பெயரில். மேட்டுக்குடி மகளிருக்கு ஒரு போட்டிவைத்து இருக்கிறது. ''புதையலை தேடி'' சொந்தமாக கார் வைத்திருக்கும் பெண்கள் அதில் கலந்துகொள்ளலாம். ஜவுளி நிறுவனம் வழங்கும் வரைப்படத்தை தொடர்ந்து சென்று யார் முதலில் அந்த புதையலை அடைகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. உழைக்கும் மகளிர் தினம் எப்படி மகளிர் தினமாக மருவியது என்பதை கண்டறிவதே உண்மையாக நாம் தேடவேண்டிய புதையல் ஆகும்.
மகளிர் தினம் என்பது எப்படி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என பார்த்தால் அது வெறும் fair & lovely யும் இன்னும் சில ஜவுளி நிறுவங்களும் கொண்டாடுவது போல சும்மா வாழ்த்து சொல்லி கொண்டாட ஆரம்பித்ததுவல்ல. மாறாக அது தியாகத்தின் வரலாறு போராட்டத்தின் வரலாறு.
18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பெண்கள் துணி உற்பத்திக்காக பஞ்சிலிருந்து நூலை பிரித்து கொடுக்கும் வேலைகளை தங்களது வீடுகளில் செய்துவந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் துணி உற்பத்தியில் நீராவி எஞ்சினின் வருகையால் உற்பத்தி வேகம் அதிகரிக்கிறது அதற்க்கு இணையாக பெண்களால் நூலை பிரிக்கமுடியாமல் அவர்கள் இரவுபகலாக வேலை பார்க்கின்றனர். இதனால் சில பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதில் கூட சிக்கலாகின்றது. bachelor என திருமணம் ஆகாத ஆண்களை ஆங்கிலத்திலே குறிப்பிடுவதுபோன்று பெண்களை குறிப்பிடும் வார்த்தை spinster என்பதுகூட இதிலிருந்து பிறந்ததுதானாம். அப்படி குறைவான கூலிக்கு நேரம்காலம் இல்லாமல் சுரண்டப்பட்டுவந்த பெண்கள் தங்களுக்கு சம உரிமை வேண்டும் எனவும். பத்து மணிநேர வேலை நேர உரிமை வேண்டும் எனவும் 1857 இல் மார்ச் 18 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மறியல் நடத்தினர். வழக்கம்போல காவல்துறை தடியடி நடத்தி அப்போராட்டத்தை ஒடுக்கினர். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு பின்னர் அதே மாதத்தில் அந்த பெண்கள் முதல் தொழிற்சங்கத்தை கட்டினர். 51 ஆண்டுகளுக்கு பிறகு 1908 அன்று தையல் துறையை சார்ந்த வாரி சகோதரிகள் 1857 போராட்டத்தை கவுரவித்தும். வாக்குரிமை வேண்டியும் , குழந்தைகள் உழைப்பை சுரண்டுவது ஒழியவேண்டும் என வலியுறுத்தியும், பேரணி நடத்தினர். இதே போல நியூயார்க் டிராயாங்கிள் தொழிற்சங்க போராட்டத்தில் 146 பெண்கள் தாங்களே தியாகம் தந்தனர்."பெண்களின் இடம்" எனும் அற்ப சித்தாந்தங்கலையே வெட்க்கப்படவைத்த பெண்கள் அவர்கள். 1910 மே மாதத்தில் நடந்த சோசலிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸ்சில் பிப்பிரவரி இறுதி ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச பெண்கள் தினமாக அறிவிக்க வேண்டுமென்று பெண்கள் தேசிய குழு பரிந்துரைத்தது. அதற்குப்பிறகு பெண்கள் தினத்தை சர்வதேச நிகழ்ச்சியாக அடையாளப்படுத்த வேண்டுமென்ற கருத்துடன் அதே வருடம் கொபன்ஹெகனில் நடந்த 2 வது சர்வதேச சோஷலிச பெண்கள் மாநாட்டில் பிரதிநிதிகளாக அவர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் ''கிளாரா ஜெட்கின்'' என்ற புகழ்பெற்ற கம்யுனிஸ்ட் தலைவி சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில்பெண்களுக்கு உலகம் முழுதும் வாக்குரிமையை பெற உதவுவதற்கு ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அது மார்ச் 19 ஐ மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது. பின்னர் சில சதிகார அரசுகளின் திட்டப்படி மகளிர்தின எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டது.இவ்வாறு மிக நீண்ட போராட்டம் மற்றும் பெண்களை திரட்டி பெண்களுக்கு எதிராகவே துரோகம் இளைத்தல் போன்ற அரசின் சதிச்செயல் ஆகிய எண்ணற்ற இன்னல்களையும் தாண்டிதான் இறுதியாக இன்றைய சர்வதேசிய மகளிர் தினம் மார்ச் 8 ல் உலகும் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மார்ச் 8 இதுவெறும் வார்த்தையல்ல பெண்கள் போராடிப்பெற்ற வெகுமதி.
அன்றைக்கு போராடவேண்டிய தேவை இருந்தது அதற்க்கு இன்றைக்கு என்ன எனும் கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுவதை காணமுடிகிறது. ஆனால் இன்றைக்கும் பெண்கள் வெறும் அலங்காரப் பொருளாகவும் நுகர்வு மற்றும் விற்பனை பண்டமாகவே இன்றைய சமூகத்தில் இருக்கிறாள் என்பதுவே உண்மை. குடும்ப அமைப்பு துவங்கி சமூகத்தின் எந்த இடத்திலும் பெண் சுதந்திரமானவளாக இல்லை. ஆணாதிக்கம் மொழிவழியும் மதம் வழியேயும் பெண்களை ஆளுமை செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றது. திரைப்படம் போன்ற ஊடகங்களின் வழி விர்ப்பனைக்காக மட்டுமல்ல பிடிக்காதவனை ஏசுவதற்கும் பெண்களின் அங்க அவயங்கலையே நமது மொழியில் பயன்படுத்துகிறோம். ஒருவனை இகழ்வதற்கும் அவனது தாயே பலிக்கிறது மொழி. ஓடுகாலி,வாயாடி,விதவை,விபச்சாரி போன்ற சொல்லாடல்களில் கூட ஆணாதிக்க சொல்லாடல்களே.அனைத்து மதங்களும் பெண்களை ஆணுக்கு கீழானவனாகவே பாவிக்கிறது மேலும் அவை பெண்களை அலங்கார பொருளாகவே பாவிக்கிறது என்பதன் மிக சிறந்த உதாரணம் சுவர்க்கம் எனும் கான்செப்ட் எந்த மதங்களின் சுவர்கங்களும் பெண்ணின்றி முழுமை அடைவதில்லை.
ஊடகங்களில் பெண். ஊடகங்களில் இன்றைய பெண்ணின் நிலையென்ன. அண்ணாச்சியின் ஆசை நாயகி ஜீவஜோதி இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?. நித்தியானதா ரஞ்சிதா கஜகஜ. கஞ்சா சரினா என்ன ஆனார். ஜெயலட்சுமி இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்? போன்ற செய்திகளை இரண்டு பக்கத்துக்கு மாஞ்சு மாஞ்சு எழுதும் எந்த பத்திரிக்கையும். சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் பெண்களைப்பற்றி எழுதுவதில்லை. ஒடுக்கப்படும் பெண்கள் அமைப்பாக திரலவேண்டிய அவசியத்தை பற்றி ஒரு வரி கூட எழுதுவது இல்லை. ஜீவஜோதியையும், ரஞ்சிதாவையும்,சரினாவையும் தெரிந்த எத்தனை பேருக்கு ஓசூர் தேவியை தெரியும். தேவி ஓசூர் சிப்காட்-2ல் எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்யும் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அந்நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக திறத்துடன் போராடிய பெண்.நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக தீரத்துடன் போராடிய தேவியை முன்னுதாரணமாக எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை. செய்தி ஊடகங்களை இப்படி என்றால் தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்சினிமாவில் பெண்களின் பணி என்பதே கதாநாயகனுக்கு சமூகப்பணிகள் இல்லாதபோது அவரை என்டர்டிரைன் பண்ணுவதும் அவனுடன் ஆடிப்பாடுவதுமே. 75 ஆண்டுகளில் இதுவரை வந்துள்ள எந்த திரைப்படத்திலும் ஆண்(அதாவது நாயகன்) பெண்ணை ஏமாற்றுவதாகவும். அதற்காக அப்பெண் ஆண் வர்கத்தையே குறைகூறி பாடுவதுபோலவும் வந்ததாக நினைவிலில்லை. ஆனால் நேற்று வந்த 7 ஆம் அறிவு யம்மா யம்மா காதல் பொன்னம்மா முதல் நாளை வரவிருக்கும் 3 படத்தின் கொலைவெறி வரைக்கும் எல்லாமே பெண்ணினத்தை கொச்சைப்படுத்தும் வரிகளே. இதுல கொடுமை என்னவென்றால் சில பெண் பாடலாசிரியர்களே இதுபோன்ற பாடல் இயற்றுவதே. அவங்களை சொல்லி என்ன பண்ண நாயகன் எனும் ஆணுக்கான பாடலைத்தானே அவரும் இயற்றுகிறார்.இப்படி இழிவு படுத்துவதோடுமட்டுமல்லாது திரைப்படங்கள் செய்யும் இன்னொரு முக்கியமான விஷயம். பெண்களை விற்பனை பண்டமாக பார்ப்பது. பெண்களை பண்டமாக பாவிக்கும் இந்த ஆணாதிக்க முதலாளித்துவ சமூகம் மார்க்ஸை நோக்கி கேட்டது. ''பொது உடமை பொது உடமை என பேசுறிய உனது மனைவி ஜென்னியையும் பொது உடமை ஆக்கிவிடவேண்டியதுதானே''? என்று. ''தன்னைத்தவிர எல்லாத்தையும் பண்டமாகவே பார்த்து பழக்கப்பட்ட சமூகம் என்பதால்தான் ஜென்னியிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்'' என்றான் அந்த மாமேதை.
அன்றைக்கு மார்க்ஸ் சொன்ன வார்த்தைகள் இன்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது சினிமாவில் பெண் வெறும் பண்டமாகவே வந்துபோகிறாள். டிவி சீரியல்களும் டிவியில் வரும் விளம்பரங்களும் இதிலிருந்து எந்தவகையிலும் மாறுபடுவது இல்லை. சினிமாவில் மூன்று மணிநேரம் காட்டுவதை சீரியலில் 300 எப்பிசோடிலும் விளம்பரத்தில் 30 வினாடிகளிலும் காட்டுகின்றனர் என்பதைத்தாண்டி வேறுபாடு ஒன்றுமில்லை.
ஆண்மை என்பது எவ்வளவு பொய்யோ! பெண்மையும் அவ்வளவு பொய்யே!!
பெண் பற்றி நமது பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அத்துனையும் உயிரியல் ரீதியானவை கிடையாது. எல்லாமே நமது பண்பாட்டு தொழிற்கூடங்களால் நமது மனதில் அழுத்தி ஊன்றப்பட்டவைகளே. ஆண் உண்டு ஆண்மை இல்லை பெண் உண்டு பெண்மை இல்லை என்பதற்கு மிக சிறந்த உதாரணம் நமது சமகாலத்தில் எகிப்த்தில் ஆட்சியே மாற்றிப்போட்ட கிளர்ச்சியை தோற்றுவித்த அஸ்மா மக்பூல் எனும் 26 வயது பெண்ணின் பேராண்மை.
ஹாஸ்னி முபாரக் என்ற ஆட்சியாளனின் கொடுமை தாங்கமுடியாமல் நான்கு இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீ வைத்து எரிந்து போனார்கள் எகிப்த்தில்
அந்த நெருப்பின் அரசியல் வெப்பத்தை உள்வாங்கி அதை அந்த தேசம் முழுதும் விதைத்தால் அஸ்மா மக்பூல். தன் தேசம் மாற்றம் காண ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த அவள் தன் பேஸ் புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டால் "தீக்குளித்த நான்கு இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்த தஹ்ரீக் சதுக்கத்துக்கு நான் செல்ல இருக்கிறேன் என்னைப்போல சிந்தனையுடைய எவரும் வரலாம்" என்பதே அந்த ஸ்டேடஸ். இந்த ஸ்டேடஸ் பார்த்து மூன்று இளைஞர்கள்தான் வந்திருந்தனாறாம் கூடவே காவல்துறையும். காவல்துறை அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவிட்டு எச்சரித்து அனுப்பியது.
திரும்பி வந்த அஸ்மா அச்சமடையவில்லை.அமைதியாகிவிடவில்லை. இம்முறை பேஸ் புக்கில் அவளே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டாள். அதில் "தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்கவேண்டும் அன்று யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீ குளிப்பதற்காக அல்ல என்னை சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள்" என்று ஆவேசமாகவும் "அல்லாஹுவை தவிர வேறு எந்த சக்த்திக்கும் அஞ்சாதீர்கள்" என நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியிருந்தால் .
ஜனவரி 26 ல் தேசத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தஹ்ரீக் சதுக்கத்தை தேடிவந்தனர் மக்கள்.
மக்கள் ஆம் மக்கள் மக்கள் மட்டுமே மாற்றத்தின் உந்து சக்தி என்று மாவோ சொன்னதை நிறைவேற்றிவிட்டே கலைந்து சென்றது அந்த மக்கள் கூட்டம். எனவே அஸ்மாவின் பேராண்மை அந்த கொடுங்கோலனின் ஆட்சியே அகற்றியது. இன்னைக்கு மீசை முறிக்கி நான் ஆண் என சொல்லிக்கொள்ளும் எத்தனை பேருக்கு இருக்கிறது ஆட்சியாளரை எதிர்த்து கேள்விகேட்க்கும் ஆண்மை.
இறுதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் எந்த ஒரு சமூகமும் தானாக முன்வந்து போராடாதவரை விடுதலை அடையமுடியாது. ஆணாதிக்க சிந்தனையில் உதித்த பழமொழிகள், மத நம்பிக்கைகள், சினிமா, இன்னபிற விசயங்களை தூக்கி குப்பையில் வைப்போம். முன்னொரு காலத்தில் பெண்கள் அனைவரும் ஆண்களால் பராமரிக்கபடார்கள் எனும் வரலாற்றை நம் பிந்தைய தலைமுறையின் பாடதித்தில் வைப்போம்.ஆகவே ''ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'' எனும் ஆணாதிக்க பழமொழிகளை தகர்த்தெறிவோம் ''சமூகவிடுதலை சாத்தியமாவதும் பெண்ணாலே ஆணாதிக்கம் ஒழிவதும் பெண்ணாலே'' எனும் புதுமொழி படைப்போம் வாருங்கள். நன்றி வணக்கம்
(8- 3 - 2012)அன்று சட்ட கல்லூரி மகளிர் தின விழாவில் பேசியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)